jeudi 18 septembre 2014

இன்று ஒரு தகவல்(தமிழ் தண்டட்டி)

இன்று ஒரு தகவல்




தமிழ் தண்டட்டி




ஐம்புலன்களுக்குரிய உறுப்புகள் வரிசையில் காதில் அணியும் அணிகலன்களை சிறப்பினை இன்று ஒரு தகவலாக தருகிறேன்.




 தண்டட்டி என்பது பெண்கள் காதில் அணியக்கூடிய காதணி வகைகளுள்‌ ஒன்று. இது தங்கம் அல்லது வெண்கலத்தினால் செய்யப்பட்ட ஒரு கனமான அணிகலனாகும். தென்னிந்திய கலாச்சாரங்களில், குறிப்பாகத் தென் தமிழ்நாட்டிலுள்ள பெண்களிடையே இந்தக் காதணி அணியும் வழக்கம் இருந்தது. தற்போது இந்த அணிகலன்கள் அணியப்படுவதில்லை எனினும் வயதான சிலர் இன்னும் இதை அணிந்து கொண்டிருக்கின்றனர். இதை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பாப்படம் அல்லது பாம்படம் என்று அழைக்கின்றனர். இந்த காதணி அணிவதற்காகவே காது வளர்க்க வேண்டியிருக்கும். இதற்காக அந்தக் காலப் பெண்கள் காது வளர்த்தனர்.[1]





தோடுடைய செவியன்என்று திருஞானசம்பந்தர் சிவனைப் பாடியிருக்கிறார். கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் தோடு என்ற சொல் தமிழில் புழக்கத்தில் இருக்கிறது. தோடு என்ற அணிகலனைப் பெண்கள்தானே அணிவார்கள், சிவனை எப்படி தோடுடைய செவியன்என்று சம்பந்தர் பாடினார்?’ என்ற எனது சந்தேகத்துக்கு அர்த்தநாரியின் ஆண்பாகத்தின் காதில், கடுக்கனும் பெண்பாகத்தின் காதில் தோடும் இருக்கும். அதைக் குறிக்கும் வகையில்
சம்பந்தர் பாடியிருக்கலாம். 


காதணிகளுக்கும் இலக்கியத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
சங்க காலத்தில் தினைப்புனத்தில் மேய வரும் பறவைகளை விரட்டுவதற்காகத் தமிழ் மகளிர் காதணியைக் கழற்றி வீசினார்கள் என்று கதைகள் சொல்லப்படுவது உண்டு. அக்காலத்தில் தமிழர்கள் மிகுந்த செல்வ வளத்துடன் இருந்தார்கள் என்பதை உணர்த்துவதற்காக அப்படிச் சொல்லப்படும். 



மகாபாரதத்தில் கர்ணனின் கவசத்தையும் குண்டலத்தையும் தந்திரமாக இந்திரன் பெறும் இடம் ஒன்று இருக்கிறது. குண்டலத்தை மையமாகக் கொண்டு குண்டலகேசி என்று தமிழில் ஒரு காப்பியமும் இருக்கிறது.
முற்காலத்தில் உலோகங்கள், கற்கள் தவிர, தாவரங்களிலிருந்து கிடைக்கும் பொருட்களிலும் காதணிகள் செய்யப்பட்டன. பனையோலையைச் சிறிய அளவில் சுருட்டிக் காதுத் துளைக்குள் செருகி, காதணியாக அந்தக் காலத்தில் மகளிர் அணிந்து கொள் வார்கள். இந்த வகைக் காதணிக்குக் காதோலை என்று பெயர். பழங்குடியினரிடையே இது போன்ற காதணி களை இன்றும் காணலாம். காலப்போக்கில் தங்கம் முதலானவற்றில் மேற்குறிப்பிட்ட ஓலையைப் போல் அணி கலன் செய்து அணிந்துகொள்ள ஆரம்பித்தனர். அந்த அணிகலனுக்கும் காதோலை என்ற பெயர் நீடித்தது.













இருந்த சில காதணிகளின் பெயர்கள் மிகவும் கவித்துவமானவை. செவிமலர், செவிப்பூ, ஒன்னப்பூ போன்ற சொற்களை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். காதிலேயே கவிதையைத் தொங்க விட்டிருக்கிறார்கள் அப்போது! 

முற்கால, இக்காலக் காதணிகள் சிலவற்றின் பட்டியல் இது:
ஒன்னப்பூ, கன்னப்பு, கர்ணப்பூ (மூன்றும் ஒன்றே)
ஓலை, கடுக்கன், கம்மல், கற்பூ, காதோலை, குண்டலம், குதம்பை, குழை, கொப்பு, செவிப்பூ, செவிமலர், டோலாக்கு, லோலாக்கு, தண்டட்டி, தண்டொட்டி, தாடங்கம், தொங்கட்டான், தோடு, மகரகுண்டலம், மகுடம் (இந்தச் சொல், காதணி ஒன்றையும் குறிக்கும்), முருகு, வல்லிகை, வாளி, ஜிமிக்கி). 



வட்டாரச் சொல்லின்பம்: ஓந்தி
ஓந்தி என்றால் எல்லோருக்கும் ஓணானும் பச்சோந்தியும் தான் நினைவுக்கு வரும். ஆனால், தஞ்சை வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு இன்னொன்றும் நினைவுக்கு வரும். அதுதான் சாலைப் பணியில் ஈடுபடுத்தப்படும் ‘ரோடு ரோலர்’. இந்த வாகனத்துக்குத் தஞ்சைப் பகுதிச் சிறுவர்கள் இன்னொரு பெயரும் வைத்திருக்கிறார்கள். அதுதான் கப்பிக்கார்.

காதோரம் லோலாக்கு கதை  சொல்லுமா? சொல்லாதா? என்பது தெரியாது. ஆனால் நாகரீகம் என்னும் பெயரில் விரைவில் ஆண்களும் இத்தகைய அணிகலன்களை  அணிந்தாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!

புதுவை வேலு
நன்றி:ஆசை/தி இந்து


 

 
 
 


1 commentaire: